ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவருமே அருகில் உள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி தனது தாய், தந்தையினர் விஷமருந்தி  விட்டதாகவும் தனக்கும், தம்பிக்கும் கூல் ட்ரிங்க்ஸில் மாத்திரையை கலந்து கொடுத்ததாகவும் தனது பாட்டி பெரிய கண்ணாளுக்கு பேத்தி வந்தனா செல்போனில் கூறியுள்ளார். இது குறித்து அறிந்த பாட்டி பெரிய கண்ணாள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விஷம் அருந்திய குடும்பத்தினரை அருகிலுள்ளவர்கள் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவருமே இறந்து விட்டனர். மேலும் சிகிச்சையில் இருந்த இரண்டு குழந்தைகளும் மறுநாள் பரிதாபமாக இறந்துள்ளனர். இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர்கள் கடிதம் எழுதி வைத்தது தெரியவந்தது.

இந்த கடிதத்தில்,”சுய உதவிக் குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம் அதிக கடனுக்கு பணம் வாங்கி உள்ளதாகவும். இதற்கு தனக்கு உதவியாக பெருந்துறை புதுத் தொட்டி பாளையத்தை சேர்ந்த கோபி சங்கர் (25), சிறுவலூர் பதிபாளையத்தை சேர்ந்த நாராயணசாமி (52) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (38), சுமதி (40) ஆகிய நான்கு பேரும் கடன் தொகை வாங்கித் தந்ததற்காக அதிக தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு தம்பதியினர் இருவரையும் ஏமாற்றியுள்ளனர்.

இதனால் எந்தவித உதவிக் குழுக்களிலும் பணம் பெற இயலாதபடி செய்துள்ளனர். அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளதாகவும், இதனால் நிதி நிறுவனத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு பணம் கொடுக்க முடியாமல் கடனுக்கு ஆளாகியுள்ளதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர். மேலும் தங்களது தற்கொலைக்குக் காரணம் என நான்கு பேரையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தின் படி ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு காரணமாக இருந்த கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.