கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் விவசாயியான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் ஜெகன்ஸ்ரீ கழுதூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகன்ஸ்ரீ மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து ஜெகன்ஸ்ரீயின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேற்று முன்தினம் இரவு கூத்தக்குடி காப்புக்காட்டில் உடல் பாதி புதைக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மண்ணில் புதைக்கப்பட்டவர் ஜெகன்ஸ்ரீ என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. உடனடியாக ஜெகன்ஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவருக்கும் ஜெகன்ஸ்ரீக்கும் கார்த்திகை தீபத்தின் போது சுருள் சுற்றிய போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஐயப்பன் ஜெகன் ஸ்ரீயை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களான அபிலரசன், ஆகாஷ், 17 வயது சிறுவனுடன் சேர்ந்து ஜெகன்ஸ்ரீயை மது குடிப்பதற்காக அழைத்து சென்றார்.

இதனையடுத்து ஜெகன்ஸ்ரீக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து ஐயப்பன் உட்பட 4 பேரும் பீர் பாட்டிலால் அவரை சரமாரியாக குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை குழிதோண்டி புதைத்தனர். அப்போது அந்த வழியாக சிலர் நடந்து வந்ததால் பாதி புதைத்த நிலையில் உடலை போட்டுவிட்டு அங்கிருந்த 4 பேரும் தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் ஐயப்பன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.