உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா பகுதியிலுள்ள நிர்வான் ராஜ்கியா பால்கிரஹ் என்ற அரசு சிறார் இல்லத்தில் சிறப்பு தேவைகள் கொண்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 147 குழந்தைகள் வசித்து வரும் இந்த இல்லத்தில், பெரும்பாலும் பெற்றோர்கள் இல்லாத மற்றும் மனநலக்குறைபாடுள்ள குழந்தைகள் தங்கியுள்ளனர்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் 12 முதல் 17 வயதுக்குள் உள்ள நான்கு குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை குழுவை அமைத்தனர். சனிக்கிழமையன்று குழுவினர் நிலையத்தை பார்வையிட்டு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு காரணங்களைத் தெளிவுபடுத்த முயன்றனர்.

மரணங்களுக்கான காரணங்களை அறிய, குழந்தைகளின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதுடன், உடற்கூறு சோதனைக்கான மாதிரிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதே மையத்தில் தங்கி இருந்த மேலும் ஒரு பெண் குழந்தை கடந்த வாரம் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஃபுட் பாய்சன் காரணமாக 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாரடைப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 16 குழந்தைகள் இன்னும் லோக் பந்து ராஜ் நாராயணன் சங்கம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 குழந்தைகள் மையத்திலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று சந்தித்து, சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை, குழந்தைகள் மரணத்திற்காண உண்மையான நிகழ்வுகளை வெளிச்சத்தில் கொண்டு வருவதோடு, அரசுப் பால்கிரஹ் இல்லத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளையும் முறையாக மதிப்பீடு செய்வதே நோக்கமாகவுள்ளது.