
மணலி அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்து தரக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மணலி புதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிக அளவு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு வகுப்பறைகள் பழுதடைந்துள்ளதாலும் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும் 40 பேர் உட்காரும் வகுப்பறையில் 80 பேர் வரை அமர்ந்து கல்வி கற்கும் நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி கழிவறைகளை சுத்தமாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புதிய வகுப்பறைகளை அமைத்து தருமாறு பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கோரி மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொன்னேரி நெடுஞ்சாலையில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பேசியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.