
தெற்கு வியட்நாமின் லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகிலுள்ள டோங் நாய் வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று பரவி, 47 புலிகள், 3 சிங்கங்கள், மற்றும் 1 சிறுத்தை உயிரிழந்துள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம், விலங்கு சுகாதாரத்தினை பற்றிய விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளைச் சோதனை செய்ததன் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி, எச்5என்1 வகை A வைரஸால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை பொதுவாக பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், பாலூட்டிகளுக்கும் இந்த வைரஸ் பரவுவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் மற்றும் விலங்குகளுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்த வேறு யாரிடமும் எந்தவித சுவாச நோய் அறிகுறிகளும் தென்படவில்லை என்பதால், தொற்றின் ஆபத்து மனிதர்களுக்கு குறைவாகவே உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவினால், அது லேசானதிலிருந்து கடுமையான பாதிப்புகள் வரை ஏற்படுத்தக்கூடியது.