சூடான் நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. இந்த போரில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் லட்சக்கணக்கானோர் வேறு நாட்டுக்கு குடி பெயர்ந்து விட்டனர். இங்கு சண்டையிடும் ஒரு ராணுவ பிரிவினர் பெண்களை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வரிசையில் நிற்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தினசரி ஏராளமான பெண்கள் சீரழிக்கப்படும் நிலையில் தற்போது குழந்தைகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் சூடானில் கிட்டத்தட்ட 221 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதில் 30 சதவீதம் ஆண் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. ஒருபுறம் போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதோடு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்த நிலையில் 5 வயசுக்கு உட்பட்ட 16 குழந்தைகளையும் 4 பச்சிளம் குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இன்னும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்களின் தாக்குதலுக்கு பயந்து  புகார் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.