
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்ற 37 வயதான பட்டதாரி இளைஞர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் வழியாக ஆபாசமான தகவல்களை அனுப்பி, பன்முறை மிரட்டல் செய்ததற்காக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் பெண் அதிகாரி இந்த அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும், பின்னர் அது எல்லை மீறியதைத் தொடர்ந்து, சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆபாசமான மற்றும் மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த குற்றங்களை செய்தவர் திருச்சியைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்பதும், அவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நேரத்திற்கே தன்னை மாறச்செய்து, வெளிநாட்டு பெண்களை ஆன்லைனில் தொந்தரவு செய்துவருகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் திருச்சிக்கு சென்று, அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டில் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப், ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்களில், செல்வநாயகம் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்திருந்தாலும், படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். பின்னர் ஜப்பான் நாட்டில் வேலை செய்ய ஆசைபட்டு ஜப்பான் மொழி பயிற்சி வகுப்பில் சேர்ந்தவர். ஆனால் அதையும் முழுமையாக முடிக்காமல் விட்டுவிட்டார். சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகி, அதில் தன்னை முழுமையாக இழந்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க பெண் அதிகாரியை பின்தொடர்ந்து, தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார். இதுபோன்ற செயலை மேலும் பல வெளிநாட்டு பெண்களுக்கு செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், யாரும் இதுவரை புகார் அளிக்காததால் அவரது மிரட்டல் போக்கு அதிகரித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது செல்வநாயகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், இணையத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை மீண்டும் ஒரு முறை எடுத்துக் காட்டுகிறது.