
குஜராத் மாநிலம் அம்பாஜியைச் சேர்ந்த சித்திராஜ் என்ற இளைஞர், கடந்த தீபாவளி நாளன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். சித்திராஜின் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அவரது மனைவி 6 மாத குழந்தையுடன் தவித்து வந்ததைப் பார்த்த மாமனார் பிரவீன் சிங் ராணா, இந்த நிலை தொடர்ந்து இருக்கக் கூடாது என முடிவெடுத்தார்.
மருமகளின் வாழ்க்கை மீண்டும் நலமுடன் அமைய வேண்டும் என எண்ணிய ராணா, அம்பாஜி பகுதியில் உள்ள மற்றொரு சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து, தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இத்திருமணம், குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிமித்தமாக அவருக்குத் தந்தையாகவே முன்னின்ற ராணா, நிகழ்ச்சி முடிந்தவுடன் தனது மருமகளை கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீருடன் பாசத்தோடு வழியனுப்பினார்.
இந்த நெகிழ்ச்சியான மனிதநேய நிகழ்வு தற்போது அம்பாஜி பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், திருமண நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “ஒரு மாமனாரால் இப்படியும் முடியும்…!” என பலரும் பாராட்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சோகம் நிறைந்த ஒரு குடும்பத்திற்குள் ஒளிவீசும் இந்த காதலும், அரவணைப்பும் சமூகத்திற்கு ஒரு வாழ்ந்த உதாரணமாகத் திகழ்கிறது.