
கிருஷ்ணகிரி: குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் குழுவாக விசாரணை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி என்பவர்களின் 6 வயது மகள் காவ்யாஸ்ரீ, கடந்த 11-ந்தேதி வீட்டிற்கு அருகிலுள்ள பெட்டி கடையில் 10 ரூபாய்க்கு குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். குடித்த பிறகு மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.மயங்கி விழுந்த சிறுமியை மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதே போல் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர் பரணிராஜன், சிவபாக்கியம், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி வெங்கடேசன் மற்றும் மற்ற அதிகாரிகள் உட்பட குழுவொன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள குளிர்பான நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் முடிவில் தவறுகள் அடையாளம் காணப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.