திருப்பத்தூர் மாவட்டத்தில் ராணி பாபு (58) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளியாவார். இவருக்கு 7 நாட்களுக்குள் ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவருக்கு பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் அவருடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை சோதனை செய்தனர்.

அந்த விசாரணையில் அவருடைய பான் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை வைத்து திருச்சியில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராணி என குறிப்பிட்டதும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பெண் கூலித் தொழிலாளி  மாதம் 9000 ரூபாய் சம்பளம் பெறும் நிலையில், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு 2 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.