கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.