
ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் சீரழித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறுவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையின் போது தற்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது சிறுவர்கள் அனைவரும் செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு அதே போன்று செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த 7-ம் தேதி தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு அந்த சம்பவத்தை பற்றி மாணவி வெளியே கூறி விடுவாள் என்ற பயத்தில் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை ஒரு கால்வாயில் மறைத்து வைத்து விட்டனர். பின்னர் பயந்து போன சிறுவர்கள் தங்கள் தந்தையிடம் நடந்த விஷயத்தை கூறினர். அதைக் கேட்ட சிறுவனின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுமியின் உடலை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வைத்து கிருஷ்ணா நதிக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு சிறுமியின் உடலில் கல்லை கட்டி நதியில் வீசிவிட்டனர். அந்த சிறுமியின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்