விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வந்தார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தொழிலாளி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மூன்று குழந்தைகளும் காப்பகத்தில் தங்கி படிக்கின்றனர். இதில் மூத்த மகள் 15 வயது சிறுமி தென்காசியில் இருக்கும் காப்பகத்தில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் தனித்தனியாக பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டியராஜ்(44), ஜவகர்(46), தேவராஜ்(80), முருகன்(53) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பாண்டியராஜ், தேவராஜ் உள்பட நான்கு பேருக்கும் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பரப்பித்தது. பின்னர் 4 பேருக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.