
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் தலைவரும், பாஜகவின் முன்னாள் எம்பியுமான துறவி சாத்வீ பிராச்சி, ஹரித்துவாரிலுள்ள தனது ஆசிரமத்தில் செய்தியாளர்களை சந்தித்து, “பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது போல, தற்போது பல்வேறு மாநிலங்களில் ஆண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக, மனைவிகளால் சிக்கல்களில் சிக்கி, தற்கொலைக்கு செல்லும் கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, ஆண்களுக்கு பாதுகாப்பளிக்கவும், குற்றங்களை சரியான முறையில் விசாரணை செய்யவும் தேசிய ஆண்கள் ஆணையம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தனிப்பட்ட முறையில் வேண்டியுள்ளார். இதே கோரிக்கையை ஆதரித்து, உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் மகேஷ் குமார் திவாரி தாக்கல் செய்த அந்த மனுவில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் திருமணமான ஆண்களுக்கு தனி வழிகாட்டி அமைப்புகள் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தேசிய குற்றப்பதிவேடு மையத்தின் (NCRB) தகவலின்படி, 1,64,033 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில், அதில் 81,063 பேர் திருமணமான ஆண்கள் என்பது கவலைக்கிடமானதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு 33.2% ஆண்கள் குடும்ப பிரச்சனைகளால், 4.8% பேர் திருமண சங்கடங்களால் தற்கொலை செய்திருந்தனர்.