
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு தான் தமிழக அரசியலில் இன்றைய தலைப்புச் செய்தியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைவர் விஜய் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் அனல் பறக்க பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற உண்மையை கூறியதற்கு பல சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது ஒரு அழைப்பு வந்தது. உங்களின் இடம் மற்றும் உங்களின் கொள்கை என தமிழக வெற்றி கழகத்திலிருந்து தொடங்குங்கள் என்றார்.
அப்படித்தான் தமிழக வெற்றி கழகத்திலிருந்து என் பயணம் தொடங்கியுள்ளது. பெரியாரையும் சமூக சீர்திருத்தத்தையும் முன்னிலைப்படுத்தியே இன்றைய அரசியல் போலி கபடதாரிகளின் கைகளிலும் ஊழல்வாதிகளின் கைகளிலும் இருந்து கொண்டிருக்கின்றது. அதனை துடைத்தெறிய வேண்டும். பெரியார் கண்ட கனவு, அண்ணா கண்ட கனவு மற்றும் அம்பேத்கர் கண்ட கனவு என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. வெற்றி பெற்று ஊழல் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் ஒரே மாற்று தமிழக வெற்றி கழகம் தான்.
தமிழகத்தை கடனில் மூழ்கடித்து வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. கேள்வி கேட்டால் பொருளாதாரம் வளர்ந்து விட்டது, 10 லட்சம் கோடியை கொண்டு வந்து விட்டோம் என்று கதை சொல்கிறார்கள். எல்லாமே மீடியா செட்டிங். இதனைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தக் கூட்டத்தை எப்படி அடக்குவது என தூக்கத்தில் கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ரசிகர்களின் கூட்டம் என விமர்சனம் செய்கிறார்கள். இப்படிதான் எம்ஜிஆரை சொன்னார்கள். 77 இல் ஆட்சியைப் பிடித்தார், 89 வரை ஆட்சியை யாராலும் பிடிக்க முடியவில்லை என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.