
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார்.
அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி (25) என்பவருடன் அவர் பழகத் தொடங்கினார். இருவரும் கடந்த 9 நாட்களாக ஒருவரையொருவர் சந்தித்து வந்த நிலையில், நேற்று தூத்துக்குடி டவுனில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் மாரிக்கனியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது டாஸ்மார்க் கடையில் 3 குவார்ட்டர் மதுவை வாங்கிச் சென்ற மாரிக்கனி, ‘எனக்கு 2, உனக்கு 1’ என கூறியதாக தெரிகிறது. ஆனால் ஜெபவயலட் அதனை முழுமையாக குடித்ததோடு, மாரிக்கனியின் மதுவையும் குடித்துள்ளார். இதனால் இருவருக்குள் வாக்குவாதம் உருவாகி, கோபமடைந்த மாரிக்கனி, அருகில் கிடந்த உருட்டுகட்டையால் ஜெபவயலட்டை தலையில் பலத்தமாக தாக்கியுள்ளார்.
தலையில் காயமடைந்த ஜெபவயலட், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நிலையில், “வீட்டில் தவறி விழுந்தார்” என கூறி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் போலீசாரின் விசாரணையில் உண்மை தெரியவந்தது. இதையடுத்து மாரிக்கனியை போலீசார் கைது செய்தனர். ஜெபவயலட் தற்போது தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி வருகிறார்.திருமணமான அதே நாளில் மதுவுக்கு ஏற்பட்ட தகராறால், மரண அபாயத்தில் சிக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.