
உலக அளவில் அரசியல், சமூக செயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் தொழில்துறை என தற்போது பெண்கள் சாதிக்காத துறையே கிடையாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாளும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வது வெறும் பழமொழி கிடையாது. ஏனெனில் ஆண்கள் துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு தோள் கொடுத்து அவர்களை தாங்கி பிடித்து வாழ்க்கை என்னும் பந்தயத்தில் முன்பை விட வேகமாக ஓட வைப்பவள் தான் பெண். பெண்கள் சாதிப்பதற்கு எவ்வளவோ தடைகள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் தாண்டி எதிர்நீச்சல் போட்டு புகழ் வெளிச்சத்திற்கு வந்த ஏராளமான சாதனை பெண்மணிகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தாயாக, மனைவியாக, மகளாக, தங்கையாக என நம் வாழ்வில் உள்ள உறவின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற்ற ஒரு உறவாக திகழும் பெண் உடலுறுதி கொண்ட ஆண்களை விட மன உறுதியில் சிறப்பு மிக்கவர்களாக திகழ்கிறார்கள். பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களின் சிறப்புகளை போற்றும் விதமாக கடந்த 1913-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ம் தேதி உலக அளவில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒரு காலத்தில் வீட்டு வேலைக்கு தான் பெண்கள் என்று இருந்த நிலை மாறி தற்போது பெண் பிரதமர், பெண் சபாநாயகர், பெண் முதல்வர், பெண் ஜனாதிபதி, விண்வெளி வீராங்கனைகள், விளையாட்டு வீராங்கனைகள் என பெருமை மிகு பதவியில் வகிக்கும் பெண்ணியத்தை போற்றி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.