தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அம் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை வடமாநில தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் திருப்பூரில் மட்டும் சுமார் 1 1/2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும் தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவியதாக செய்திகள் வெளிவந்தது. இதேபோன்று கோவை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே கூட அண்மையில் தகராறு ஏற்பட்டது.

தமிழகத்தில் பெரும்பாலான தொழில்களில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் கூடுதலாக வேலை பார்ப்பதால் தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்தது. தற்போது வட மாநில தொழிலாளர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என ஒரு செய்திகள் பரவிக் கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வர இருப்பதால் அதற்காக கூட வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.