திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 4- ஆம் தேதி நாலுமுக்கு தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற ஜெஸ்ஸி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜெஸ்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை மாஞ்சோலை நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை உடலை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.