
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொடர்பை கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும். இதனைப் போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100- ஐ கடந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 102 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.