
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆதிவாசி மக்களுக்கு வழங்கிய நிலத்தை அரசு அதிகாரிகளின் துணையுடன் சிலர் அவர்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்.
அந்த நிலத்தை மீட்டுத் தருவதோடு ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு மறுவாழ்வு அளித்து நிலம் மோசடி தொடர்பாக மேல்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து ஆதிவாசி மக்களுக்கு குடிநீர், நடைபாதை, மயானவாசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.