இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வெப்பநிலை காரணமாக ஒடிசாவில் இன்று முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் ஈரோடு, கரூர் மற்றும் மதுரை உட்பட எட்டு இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் முன்கூட்டியே விடுமுறை வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.