
1989 ஆம் வருடம் முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கோரிக்கை ஏற்று அப்போதைய பிரதமர் வி பி சிங்க் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு நிலையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார். 2017 ஆம் வருடம் இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து விமான நிலையத்தில் மீண்டும் தலைவர்கள் பெயர்களை வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். அந்த கட்டிடத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் என்றும், காமராஜர் உள்நாட்டு முனையம் என்றும் மீண்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களுக்கு மீண்டும் தலைவர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.