கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். அவர்களும் மும்முரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று முக்கிய வேட்பாளர்கள் உட்பட பலரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

கர்நாடகாவில் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகத்தில் தனித்து போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்துவிட்டது. இதையடுத்து, அவசர மையக்குழு கூட்டத்தை அண்ணாமலை இன்று கூட்டுகிறார். இபிஎஸ்-ம் இன்று மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சூசகமான வார்த்தை மோதலில் இருந்த இரு கட்சிகளும் இன்று தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வாய்ப்புள்ளது.