
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள் வீடு திரும்பிய நிலையில் 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா, கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டி, பள்ளி வளாகம், சத்துணவு மையம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளனர். நேற்று பள்ளிக்கு வந்த 17 மாணவ, மாணவிகளிடம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா நலம் விசாரித்தார். மேலும் உணவு பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆய்வக பரிசோதனை முடிவு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப்-கலெக்டர் தெரிவித்துள்ளார்.