மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆமை வேகத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது திமுக ஆட்சி காலத்தில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் திமுக கோடநாடு வழக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்த்து சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஒரு வருடமாக கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட நீதிபதி தற்போது சேலத்திற்கு மாற்றப் பட்டுள்ளார். இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி சந்திப்புதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் கோடநாடு வழக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.