சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்று பணிக்காக 8 பெண் போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பெண் போலீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளார். அதில் கண்ணகி நகர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசாமி தங்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொந்தரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை கண்டித்தபோது பழிவாங்கும் நோக்கத்துடன் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தியதாகவும், அதன் பிறகும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உயர் அதிகாரிகள் பெண் போலீசாரிடம் விசாரணை நடத்தி அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முத்துசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கண்ணகி நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து 8 பெண் போலீசாரும் விடுவிக்கப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.