
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சக்திவேல் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்ததற்கு அவருக்கு 1050 ரூபாய் வருமானம் கிடைத்தது.
பின்னர் சக்திவேலை ஒருவர் தொடர்பு கொண்டு பேசி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி சக்திவேல் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் சக்திவேலை தொடர்பு கொண்டு பேசவில்லை. பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து சக்திவேல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.