
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 ஆண்டில் மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 3 மாதங்களில் பெற்ற 12,000 புகார்கள் அடிப்படையில் ரூ.27 கோடி மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக 29 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய 22,240 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.