சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பாக “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” எனும் சொகுசு வாகனச் சேவை இன்று ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பாக ஏற்காடுக்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக சேலம் புது பேருந்து நிலையத்திலிருந்து தினசரி காலை 7:30 மணியளவில் சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ரயில் நிலையம், ஐந்து ரோடு அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியே ஏற்காடு சென்றடையவுள்ளது.

ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பீக்கு பூங்கா, பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா போன்ற சுற்றுலாப் பகுதிகளுக்கு பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதியில்லாமல்) ரூ.860/- (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் குளிர்சாதன வசதியுடன் ரூ.960/- நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த வித பயணக் கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.