டெல்லி இந்திரா காந்தி விமானம் நிலைய பகுதியில் ஹோட்டல் ரோசெட் ஹவுஸ் ஆப் ஏரொசிட்டி எனும் நட்சத்திர விடுதியானது இருக்கிறது. இந்த விடுதியில் கடந்த 2019-ம் வருடம் மே மாதம் 30ம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு அறை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே விடுதி பணியாளர் பிரேம் பிரகாஷ் என்பவர் அங்குஷ் தத்தாவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. நட்சத்திர விடுதியின் நிர்வாக குழுவில் பணிபுரிந்து வரும் பிரேம் பிரகாஷ், பணம் பெற்றுக்கொண்டு அங்குஷ் தத்தாவை ஏறத்தாழ 603 நாட்கள் பணம் ஏதும் பெறாமல் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் வருடம் மே மாதம் 30-ம் தேதி ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு அங்குஷ் தத் அறை எடுத்ததாகவும், விடுதி நிர்வாகத்திற்கு தெரியாமல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வரை அவர் தங்கியதாகவும் விடுதி நிர்வாகம் போலீசில் புகாரளித்துள்ளது. 10 லட்சம், 12 லட்சம் மற்றும் 20 லட்சம் ரூபாய்க்கான 3 காசோலைகளை அபிஷேக் தத்தா வெவ்வேறு தேதிகளில் செலுத்தியதாகவும், ஆனால் அவை திரும்ப பெற்றதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2 வருடங்கள் விடுதியில் தங்கி இருந்த அங்குஷ் தத்தா சுமார் ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக ஹோட்டல் நிர்வாகமானது தெரிவித்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.