
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எந்திரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் இருவரும் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓட முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவி காய வைத்திருந்த தீக்குச்சிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். படுகாயங்களுடன் கனகலட்சுமி வெளியே ஓடிவந்து உயிர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே படுகாயமடைந்த கனக லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.