
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டது. குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போட்டதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடுத்த தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்..
அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவமும் அரங்கேறியது. தனியார் மருத்துவமனைக்கு செல்ல போதிய பணம் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற தவறான சிகிச்சை அளிப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய அரசு மருத்துவர்களே அலட்சியமாக செயல்படுவது எந்த வகையில் நியாயம். இது போன்ற சம்பவங்களால் அரசு மருத்துவமனைகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
மேலும் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது..
https://twitter.com/dmdkparty2005/status/1675865559198494720