சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அந்த வாலிபர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் ஓட ஓட விரட்டி போலீசாரை கையால் சரமாரியாக தாக்கினார்.

இதனையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரியவந்தது. போதையில் சாந்தகுமார் மூன்று இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.