
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி கீர்த்தி தனது உறவினரான ராபர்ட் என்பவருடன் கரடிபுத்தூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ராபர்ட்டுடன் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கரடிபுத்தூர் பாலம் அருகே சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கீர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி கீர்த்தி முளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர் சம்பந்தத்துடன் கீர்த்தியின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள், நுரையீரல் ஆகிய ஏழு உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு தானம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.