ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, அதன்  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ”I.N.D.I.A” என்ற கூட்டணியை அமைத்த பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த இடைத்தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டன.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்னவென்றால் ? பாரதிய ஜனதா கட்சி அவ்வளவு எளிதாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதேபோல் இந்தியா கூட்டணியும் முறையாக கூட்டணி வலுப்படுத்தி,  பிரச்சாரங்களை திட்டமிட்டால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

நடைபெற்ற ஏழு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்கு தொகுதிகளை ”இந்தியா” கூட்டணியும்,  மூன்று தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியும் கைப்பற்றியுள்ளது.  திரிபுராவில் இரண்டு தொகுதியையும்,  உத்தரகாண்டில் ஒரு தொகுதியையும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் மேற்குவங்கத்தில் ”இந்தியா” கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்,   ஜார்கண்ட் மாநிலத்தில் ”இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ”இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும்,  கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.