தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயன்பெறாத பலருக்கும் சந்தேகம் அதிகமாக உள்ளது. அதனால் அதனை தீர்த்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையங்களை அணுகி ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு விவரங்கள் மூலமாக விண்ணப்ப நிலை குறித்தும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படும். மேலும் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கு பலருக்கு தகுதி இருந்தும் வங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்காமல் இருப்பதால் அவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. இது தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு சார்பில் அவர்களை ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உடனே பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் கார்டு இணைக்காமல் உள்ளவர்களுக்கு அஞ்சல் துறை மணி ஆர்டர் மூலமாக ஓரிரு நாட்களில் பணம் அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.