செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதீ  கன மழை பொழிந்துள்ளது. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் 14-12-2023 அன்றே தென் மாவட்டங்களில் நான் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் அதீ கன மழை பெய்யும் என்று செய்தி வெளியிட்டார்கள், அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஊடகத்திலும்,  பத்திரிகைகளிளும் இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.

உடனடியாக இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதீ  கன மழையால் இந்த நான்கு மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதற்கு முழு காரணம் அரசு உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியது தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்களுடைய பாதிப்பை குறைத்திருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை  வருவதற்கு முன்பாகவே மக்களுக்கு எந்தெந்த பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் புயல் – வெள்ளம் – கனமழை செய்தி வெளியிடுகின்றதோ,  அதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு,  அரசு உரிய முறையில் செயல்பட்டிருந்தால் இன்றைக்கு சென்னையில்  மிக்ஜாம் புயல்  பாதிப்பில் இருந்தும் மக்களை மீட்டிருக்கலாம்.

இப்பொழுது தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை – வெள்ளத்தில் இருந்தும் மக்களை பாதுகாத்திருக்கலாம். ஆனால் விடியா திமுக முதலமைச்சர் திரு.  ஸ்டாலின் அவர்கள் வீர வசனம் பேசுகிறார். ஏதோ சென்னையில் புயல் – கனமழை பெய்ததில் விரைவாக செயல்பட்டதால் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்ற செய்தியை டெல்லியில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கின்றது.  ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் மக்கள் எந்த அளவுக்கு இந்த அரசை விமர்சனம் செய்தார்கள் என்று அவர் பார்க்கவில்லை போல் இருக்கிறது.

ஊடக நண்பருக்கும், பத்திரிக்கை நண்பருக்கும் நன்றாக தெரியும். கடந்த 03 – 12 – 2023 அன்று மாலையிலிருந்து அடுத்த நாள் 12 மணி வரை 04 – 12 –  2023  மதியம் வரை தொடர்ந்து கனமழை சென்னை, சென்னை  சுற்றியுள்ள புறநகர் மாவட்டம்,  திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் கனமழை பொழிந்தது.

இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி,  குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து,  வீட்டில் இருந்து மக்கள் வெளியே பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு,  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதெல்லாம் இந்த முதலமைச்சருக்கு  கண்ணுக்கு தெரியவில்லை. எதோ மத்தியக்குழு வந்ததாம்…. பார்வையிட்டதாம்… பாராட்டிவிட்டு சென்றதாம்…. அங்கு இருக்கின்ற மக்களை போய் கேட்டால் தான்   என்ன பாராட்டு இந்த அரசுக்கு கிடைக்கும் என்பது இந்த அரசுக்கு தெரியும் ? இந்த முதலமைச்சருக்கு தெரியும்.