மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு தான் அறிவியல் மன்றம் எனப்படுகிறது. வகுப்பறையில் வாய்ப்பு தர முடியாத கலைத்திட்டம் சார்ந்த பல இணை செயல்பாடுகளை அமைத்துக் கொடுத்து மாணவரின் ஆளுமை வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக தொடக்க கல்வி நிலையில் பயிலும் மாணவர் பொருட்களை உற்று நோக்கவும் கையாளுவதற்கும் பொருள்களை பகுத்தாயவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதற்கான வாய்ப்புகள் கட்டுப்பாடு உடைய வகுப்பறை செயல்பாடுகள் மூலமாக கிடைப்பதில்லை. நேரடி அனுபவங்கள் கிடைக்காத வகுப்பறை சூழல்கள் பெரும்பாலும் இருப்பதால் அறிவியல் தத்துவங்கள் மற்றும் பொது விதிகள் ஆகியவை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதன் விளைவாக தேர்ச்சி விழுக்காடு குறைவது மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்ட அறிவியல் கற்கும் ஆர்வம் குறைவதற்கும் வாய்ப்புகள் உருவாகின்றது. இவை அனைத்திற்கும் ஒரு வடிகாலாக அமைவது தான் அறிவியல் மன்ற செயல்பாடுகள் ஆகும்.