ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அனுபவத்தின் காரணமாக சிலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன், நடராஜன் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாததற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற நடராஜன் அனைத்து வகையிலும் தகுதியானவர் என கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகளை வீசி வருகிறார். அவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ரன்களை வீசுகிறார். அவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.