
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் பராமரிப்பு இன்றி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதேபோன்று டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் குமார் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூற முயன்ற போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதனால் சொல்ல முடியாத வேதனையில் தவித்த சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தன்னுடைய சித்தி வீட்டுக்கு சென்று வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அதோடு பெரியப்பா மகன் உட்பட 3 பேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு போக்சோ சட்டத்தின் கீழ் குமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.