தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருக்கிறது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. அதன்படி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி நாகை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தையும், கன்னியாகுமரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதன் பிறகு மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 8.19 சதவீத வாக்குகள் பெற்றுள்ள நாம்தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று 8 சதவீத வாக்குகள் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது. மேலும் வாக்கு சதவீதம் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் இரு கட்சிகளும் சமர்ப்பித்த பிறகு 15 நாட்களுக்குள் மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.