
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன் 9-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பட்டுப் புடவை எடுப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் என்னை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது மாப்பிள்ளை என் சகோதரி 15 பவுன் நகை போட வேண்டும் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் திருமணத்தை நிறுத்தி விட முடிவு செய்தேன். ஆனால் மாப்பிள்ளையின் பெற்றோர் நகை எதுவும் வேண்டாம் எனக் கூறி என்னை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக தங்கச் சங்கிலியும் வரதட்சணை பணமும் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் எங்கள் வீட்டில் போட முடியாது என்று கூறியதால் அவர்கள் திருமணத்தை நிறுத்தினர். இதனால் நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.