
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி விமான நிலையம் அமையும் நிலையில் நீர்நிலைகள், விளை நிலங்கள், குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆனால் அந்தத் திட்டத்தை கைவிடும் முடிவு இல்லை என்பதால் தற்போது தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவிற்கு குடியேறப்போவதாக ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாமல் நிலம் கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் முடிவை கண்டிக்கிறோம். நாங்கள் விவசாயிகள் வாழ தகுதியில்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை பெருமையாக கருதுகிறோம். சொந்த மண்ணில் வாழ்வதைவிட மொழி தெரியாத ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என ஒட்டுமொத்த கிராம மக்களும் முடிவு செய்து சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்விடம் கேட்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் ஆந்திர மாநிலத்தை நோக்கி கண்ணில் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் வழி அனுப்ப ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் வரவேண்டும் என்று கூறியுள்ளனர். நாங்கள் வருகின்ற 24-ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் கிளம்ப இருப்பதால் எங்களை வழி அனுப்ப ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே அனைவரும் திரண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.