
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் 51 பேர் உயிரிழந்த நிலையில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் சேலத்திலும் 8 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர தயங்கியது தான் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்று கூறியுள்ளார்.