கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த கார் ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காருக்குள் சென்று எட்டிப் பார்த்தபோது காருக்குள் டிரைவர் இருக்கையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கடந்துள்ளார் . இதனை அடுத்து அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில் கலியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதில் பிணமாக கடந்தவரின் கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தது.

கொலை செய்யப்பட்டவர் யார் ? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணையை முடிக்கிவிட்டனர் போலீசார். இதனை அடுத்து கொலை செய்யப்பட்டவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் தீபு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தீபுவுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளார்கள். இவருடைய மனைவியை அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தீபு கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கல்குவாரி மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறப்பதற்கு புதிய பொக்லைன் இயந்திரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் 10 லட்சம் பணத்தோடு மதுரைக்கு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது தான் இந்த கொலை நடந்துள்ளது. காரில் 10 லட்சம் பணத்தையும் காணவில்லை. அவர் வரும் வழியில் ஒருவரை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபர்தான் அவரை கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். காருக்குள்ளே தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.