நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதியில் அருள்மணி (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினர். இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் அருள்மணியிடம் திருமண செலவிற்கு போதிய பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் அதன்பின் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் புஷ்பவனம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அவரின் அருகில் விஷ பாட்டில் இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக வேதாரண்யம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.