இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை வென்ற நிலையில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது. ரசிகர்கள் இந்திய வீரர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். அந்த விழாவின்போது கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது, இறுதிப்போட்டி முடிவடைந்து 4 நாட்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய எங்களுக்கு சிறப்பான வரவேற்பை வழங்கிய இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மும்பை வந்ததிலிருந்து ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து வருகிறோம்.

கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறப்பாக பந்துவீசி இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதேபோன்று சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்சும் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இப்படி ஒரு அணி கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம். நான் குறிப்பிட்டு சில வீரர்களை சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இந்திய வீரர்கள் அனைவருமே தரமான பயிற்சியின் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த அணியும் கடுமையாக பயிற்சி செய்ததால் தான் கோப்பையை வெல்ல முடிந்தது என்று கூறினார்.

இந்நிலையில் முன்னதாக ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் மும்பை அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடையே விரிசல்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. அதோடு ஹர்திக் பாண்டியா விளையாடும் போதெல்லாம் அவருக்கு எதிராக மும்பை மைதானத்திலேயே ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி கோப்பையை வென்றவுடன் ரோகித் சர்மா சற்றும் யோசிக்காமல் ஹர்திக் பாண்டியாவை தூக்கி வைத்து கொண்டாடினார். இதைத்தொடர்ந்து தற்போது வான்கடே மைதானத்திலேயே அவரை புகழ்ந்து பேசி உள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியா தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்த நிலையில் அவர் எந்த மைதானத்தில் விமர்சிக்கப்பட்டாரோ அதே மைதானத்திலேயே தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளார்.