சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் என்னும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் காணப்பட்டது. எனவே இதனை சீரமைப்பதற்காக  தமிழக அரசு 10 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் சீரமைப்பு குழுவினர் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும் அழகாக பள்ளியை வடிவமைத்திருந்தனர். வகுப்பறையின் சுவர்களுக்கு ரயில் பெட்டி போன்று வண்ணம் தீட்டி வகுப்பறையின் உள்ளே திருக்குறள், பழமொழிகள், தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், பொது அறிவு மற்றும் மருத்துவ பயன்கள் போன்றவைகள் சுவர்களில் எழுதப்பட்டிருந்தன. மேலும் மாணவர்களின் கண்ணைக் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன. இதைத் தொடர்ந்து அப்பள்ளி ரயில் வண்டி போல காட்சி அளித்தது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவதாக  ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.