
கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின் கதவை திறந்து பார்க்க முயற்சித்தார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை என்பதால் தன் வீட்டின் மின்விளக்குகளை போட்டுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, தன் குடும்பத்தினரின் உதவியோடு வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அந்த நபர் வீட்டின் கதவை திறக்க முயற்சித்ததும், சிசிடிவி கேமராக்களை உடைத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து, கையில் சூட்கேஸ் உடன் ராமசாமி வீட்டில் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதேபோன்று கடந்த சில நாட்களாக, பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ராட்மேன் மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளை முயற்சியும் ராட்மேன் கும்பலில் ஒருவர் செய்திருப்பார்களோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.